|
நகரத்தார் தொன்று தொட்டு
ஆற்றி வரும் தமிழ்ப் பணியை எங்கள் ஊரிலும் பரவலாக்க வேண்டும் என்ற எழுச்சியில்
தொன்றிய கவிமணி மன்றத்தின் வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
பெருமைப்படுகின்றோம்.
இன்றைய அரும்பு நாளைய
மலர், இன்றைய சிறுவனே நாளை நம் நாட்டின் தலைவன். நல்ல குழந்த்தைகளே நாட்டின்
செல்வங்கள் அச்சிறுவர்களுக்கு இளம் பருவத்தில் உயர்ந்த எண்ணங்களை ஊட்ட வேண்டும் என
எண்ணி இளம் குழந்தைகளுக்காகவே கவிதை இயற்றிய முதல் கவிஞர் கவிமணியவர்கள். அவர்தம்
தொண்டினை போற்றும் வகையில் அன்றைய பள்ளி மாணவர்களாயிருந்த பலர் ஒன்று சேர்ந்து
15.08.1958ல் கவிமணி படிப்பகம் என்ற பெயரில் ஒரு படிப்பகத்தை
தோற்றுவித்தனர்.
ஒராண்டைக்கடந்த
அப்படிப்பகம், தன் முதலாம் ஆண்டு விழாவை 15.08.1959-ல் இலங்கையில் வீரகேசரி என்ற
நாளிதழைத் தோற்றுவித்த ஆவணிப்பட்டி பெ.பெரி.சுப்ரமணியன் செட்டியார் அவர்கள் தலைமை
ஏற்க கவிஞர் முடியரசன் அவர்களும், காப்டன் எஸ்.குழந்த்தைநாதன் அவர்களும்,
முரு.சேதுராமன் அவர்களும் உரையாற்ற சீருடன் கொண்டாடிற்று. 1961 முதல் 1967 வரையில்
படிப்பகத்து உறுப்பினர்களின் உயர் கல்வி காரணமாக அமைத்தியான முறையில் தன் பணியைத்
தொடர்ந்து ஆற்றி வந்தது இப்படிப்பகம். பத்தாம் ஆண்டில் படிப்பகம் கவிமணி
மன்றமாகியது. மாறிய அவ்வேளையில் 35 உறுப்பினரோடு ஊராரின் துணையோடு
15.04.1968-ல் தனது பத்தாம் ஆண்டு விழாவினை புலவர் மணி இரத்தினம் செட்டியார்
தலைமையில் அருள் மொழியரசு திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் அருள் மழை
பொழிந்து ஆசிகள் தந்தனர்.
இம்மன்றத்தின் 12 ஆம்
ஆண்டில் இம்மன்ற பணியை விரிவாக்கி, மாணவர்களுக்கு கவிமணி அவர்கள் குறித்து
சொற்பொழிவுப் போட்டியும், பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியும் தொடங்கபெற்றது. இந்த
ஆண்டில் புதிய நிகழ்ச்சியாக திருச்சி மல்லிகை இசைக் குழுவினர் இசை
விருந்தளித்தனர்.
கவியரசு கண்ணதாசன் அவர்கள்
அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிய தன் பேருரைகளை தொடங்கிய கால கட்டத்தில்
இம்மன்றத்தில் முதன் முதலாக உரையாற்றினார். கம்பன் அடிப்பொடி, தவத்திரு
குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜா, புலவர் கீரண், திருக்குரலார், அழ.வள்ளியப்பா
போன்ற அறிஞர்களும் மற்றும் பல தமிழறிஞர்களும் பங்கேற்று தமிழ்வளர துணை செய்து
வருகின்றனர்.
கவிமணி அவர்களின்
நூற்றாண்டு விழாவினை வ.நா.சிதம்பரம் செட்டியார் அவர்களின் தலமையில் கொண்டாடி,
கவிமணியின் கவிதைத் தொகுப்பினை சிறு நூலாக அச்சிட்டு, செட்டி நாட்டரசரின்
திருக்கரங்களால் இலவச வெளியீடாக வெளியிட்டு கவிமணி கவிதைகள் வளர உதவினார்கள்.
பதினான்காம் ஆண்டு முதல்
அருள்மிகு முத்து மாரியம்மன் ஊருக்குள் உலாவரும் பத்தாம் திருநாள் இரவில்
இசை நிகழ்ச்சிகள் நடத்தி இசை இன்பம் வழங்கி வருகின்றார்கள்.
குருவிக்கொண்டான்பட்டி ஊராட்சி பகுதியில் 5, 8, 10, 12வது வகுப்பில்
முதன்மையாக மதிப்பெண்கள் பெறும் மாணவ மாணவியற்க்கு மு.சுப.சுப்ரமணியன் செட்டியார்
வள்ளியம்மை ஆச்சி அறநிலை சார்பில் ஆண்டுதோறும் பரிசளிப்பு நடத்தி சிறந்த மாணவ
மாணவியரை உருவாக்கும் செயலில் இம்மன்றம் ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.
இவ்வூர் நகரத்தார்
இளைஞர்களின் தொடர்ந்து ஆதரவினால் ஒத்துழைப்பினால் இயங்கிவரும் கவிமணி மன்றம் 2008
ஏப்ரலில் பொன்விழா காண உள்ளது.
|