மீனாட்சி சொக்கலிங்கம் திருக்கோவில் நகரகச் சிவன்கோவிலாகும். இத்திருக்கோவில் நகரத்தார் பெருமக்களால்
1905ஆம் ஆண்டில் பாலாலயம் அமைத்து கல் திருப்பணியைத் தொடங்கி குடமுழுக்கு விழா 20.01.1932ல்
நடைபெற்றது. மேலும் திரு.சிவ.கரு.முத்தையா செட்டியாரின் உபயமாக 18.06.1970ல் குடமுழுக்கு
விழா நடைபெற்றது. இன்றைய தலைமுறையினரால் 02.09.1992 மற்றும் 10.02.2006ல் குடமுழுக்கு விழா
மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இலட்ச அர்ச்சனை நடத்துப்பட்டு வருகின்றது.
தற்போது ஆண்டுதோறும் நகரத்தார் பிள்ளையார் நோம்பும் ஆடி வெள்ளி திருவிளக்கு வழிபாடும் நடத்தப்பட்டு வருகின்றது.
|
|
ஆழ்ந்த சைவப்பற்றுடைய
நகரத்தார்கள் தங்கள் ஊர்தோறும் சிவன்கோவில் கட்டி வழிபடுவதை சமுதாயக் கடமையாக
மேற்கொண்டனர். அவ்வாறு கோவில் கட்டும்பொழுது தனிபட்ட செல்வர்கள் கட்டாமல் அவ்வூர்
நகரத்தார்கள் அனைவருக்கும் உரிமையும் பொறுப்பும் இருக்கும் வண்ணம் பொதுக்
கோவில்களாகக் கட்டினர். அதனாலேயே இக்கோவில்களுக்கு நகரச் சிவன்கோவில் என்ற பெயர்
ஏற்பட்டது.
|
|
நகரச் சிவன்கோவில்கள்
வழிபாட்டுத் தலங்களாகச் செயல்படுவதோடு நின்றுவிடாமல் சமுதாய மையங்களாகவும்
செயல்படுகின்றன. நகரத்தார் குடும்பங்களில் திருமணமான ஆடவர் புள்ளி என்று
அழைக்கப்படுவர். ஒவ்வொரு நகரச் சிவன்கோவிலும் கோவிலைச் சார்ந்த குடிமக்களாகிய
அந்தந்த ஊர்ப் புள்ளிகளின் கணக்கை நிர்வகித்து வருகிறது. கோவிலின் நிர்வாகச்
செலவுகளுக்காக இந்தப் புள்ளிகளிடமிருந்து புள்ளிவரி வாங்கப்படுகிறது.
ஊர்ப்பொதுவிழா நகரச் சிவன்கோவில்களால் நடத்தப்படும்பொழுது அதற்கென ஒரு தொகை
புள்ளிவரியாக வாங்கப்படுகிறது.
|
|
நகரக்கூட்டம் நடைபெறும்
மையமாக நகரச் சிவன்கோவில் விளங்குகிறது. ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட நாளில்
நகரக்கூட்டம் நடைபெறுகிறது. எல்லா நகரத்தார்களும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள
வேண்டும் என்ற அறிவிப்பு தண்டல்காரன் வாயிலாக அனைத்து புள்ளிகளுக்கும் அனுப்பப்
படுகின்றது. இயல்பான ஆண்டுக் கூட்டத்தைத் தவிரத் தேவை ஏற்படும்பொழுது நகரக்கூட்டம்
கூட்டப்படுவதுண்டு. அனைத்து ஊர் நகரத்தார்களுக்கும் பொதுவான அமைப்புகள்
அறக்கட்டளைகள் ஆகியவற்றுக்கு அந்தந்த ஊர்ச்சார்பாளர்கள் அந்தந்த ஊர்
நகரக்கூட்டத்தில் தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள். நகரத்தார் வீடுகளில்
தைப்பொங்கல் வைப்பதற்குரிய நல்லநேரம் எது என்பதை அறிவிப்புப் பலகையில் எழுதி
வைத்து நகரச் சிவன்கோவில்கள் உதவுகின்றன.
|
|
நகரத்தார் குடும்பச்
சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பணிப்புரியும் நகர பணியாளர்களை நகரச்
சிவன்கோவில்களே நியமித்து நிருவகித்து வருகின்றன.
|
|
திருமணத்தின்போது
மாப்பிள்ளை, வெளியூராக இருப்பின் "மாப்பிள்ளை அழைப்பு" பெரும்பாலான ஊர்களில் நகரச்
சிவன்கோவில்களில் இருந்தே நடைபெறும். திருமணம், மணிவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்குத்
தேவையான பொருட்களை (தலைப்பாகை, மகரி, மாதாரி, வேவுக்கடகம், திருப்பூட்டும் தட்டு,
முளைப்பாரி, முக்காலி, சாந்திக்குரிய வேள்விக் குடங்கள், சிவகண்டி மாலை) நகரச்
சிவன்கோவில்கள் வாங்கி வைத்துக் கொண்டு தேவைப்படும் நகரத்தார்களுக்கு ஒரு சிறு
தொகையைப் பெற்றுக்கொண்டு கொடுத்து உதவுகின்றன.
|
|
நகர மடம், நகர விடுதி
ஆகியவை அமைந்துள்ள ஊர்களில் அவற்றை நகரச் சிவன்கோவில்களே நிருவகிக்கின்றன. பல
ஊர்களில் நகரச் சிவன்கோவில்களே வேல்பூசை அல்லது மகேசுவரபூசையை நடத்துகிறன.
பிள்ளையார் நோன்பு அன்று பொதுவில் இழை எடுத்துக்கொள்ளும் பழக்கம் உள்ள ஊர்களில்
அதனை நகரச் சிவன்கோவிலே பொறுப்பேற்று நடத்துகின்றது. மகர் நோன்பு அன்று நகரத்தார்
சிறுவர்கள் 'அம்பு போடுவதற்கு' உரிய ஏற்பாட்டை நகரச் சிவன்கோவிலே செய்கிறது.
|